வரலாறு


லக வரலாற்றில் கோடிக் கோடியாக மனிதர்கள் தோன்றி மறைந்து உள்ளனர். அவர்களில் சிலர்தான் மனிதக் காலச்சுவடிகளில் அடையாளங்களைப் பதிக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் டான்ஸ்ரீ சோமசுந்தரம் அவர்கள். மலேசியத் தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகத்தில் தவிர்க்க முடியாத மனிதர். மலேசியத் திருப்புமுனைகளின் காரணகர்த்தாகவும் விளங்கி வருகிறார்.

இளமை வாழ்க்கை

டான்ஸ்ரீ சோமா அவர்கள் கே.எஸ்.இரத்தினசாமிப் பிள்ளை, திருமதி. அன்னக்கிளி அம்மையாருக்கு 1930ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 13ஆம் தேதி தெலுக் இந்தானில் பிறந்தார். இவருக்கு இரண்டு வயதாகும் போதே, தந்தையார் குடும்பத்தை அழைத்துக் கொண்டு தமிழகத்திற்கு பயணமானார்.

அங்கு பூர்வீக வீட்டில் குடி அமர்த்திவிட்டு மீண்டும் மலாயா திரும்பிவிட்டார். தாயாரின் பொறுப்பில் இவரும், இவருடைய அண்ணன் கே.ஆர்.சொக்கலிங்கமும் வளர்ந்து வந்தனர். தொடக்கக் கல்வியை தமிழகத்தில் மேற்கொண்ட இவர் தாயார் மரணத்திற்குப் பின் தன் தந்தையாருடன் மீண்டும் மலாயா வந்தார். தன் தந்தையாரின் நண்பர்களின் வீடுகளில் தங்கி இவரும் அண்ணனும் தங்கள் கல்வியைத் தொடர்ந்தனர்.

1941ஆம் ஆண்டு ஜப்பானியர் படையெடுப்புக் காரணத்தினால் இவருடைய கல்வி தடைப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் இவர் சிங்கப்பூருக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. 1945இல் போர் முடிவிற்கு வந்ததும், சிறிது காலம் மலாயா திரும்பி, ஒரு கடையில் உதவியாளராக வேலை செய்தார். இடைபட்ட காலத்தில் அவர் இந்திய தேசிய இராண்வத்தில் பணிபுரிந்தார் என்பது வேறு விசயம். அவர் விரைவிலேயே மறுபடியும் சிங்கப்பூர் சென்று அங்கு நண்பர்களுடன் தங்கிவிடும் ஒரு நிலைமை ஏற்பட்டது.

சிங்கப்பூரில் இருந்த போது வேலை செய்து கொண்டே மாலை வகுப்புகளில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். அதே வேளையில் இவருக்கு நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு, திரைப்படத்தில் நடிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டது. அது ஒருவகையில் நல்லதுதான். அவர் நடிக்கப் போய் இருந்தால், மலேசியத் தமிழ் எழுத்துலகம் ஒரு நல்ல மனிதரை இழந்து போய் இருக்கும். தமிழ்நாட்டு நடிகர் உலகம் மிகவும் சந்தோஷப்பட்டுப் போய் இருக்கும்.

1947ஆம் ஆண்டு விடுமுறையில் தெலுக் இந்தான் வந்தபோது, இவருடைய தந்தையின் நண்பர் மெல்னமோரின் அழைப்பின் பேரில் சூன் லீ தோட்டத்தில் உதவி அலுவலராகப் பணியாற்றத் தொடங்கினார். தனது பணிகளுக்கு இடையே வணிகவியல் துறையில் ‘பிரிட்டிஷ் இஞ்சினியரிங் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னோலஜி’ என்ற கல்வி நிறுவனத்தில் அஞ்சல் கல்வியைத் தொடர்ந்தார். அதன் பின்னர், புக்கிட் சீடிம் தோட்டத்திற்கு நிர்வாகியாகப் பதவி உயர்வு பெற்று பணியைத் தொடர்ந்தார்.

இந்திய தேசிய இராணுவப் பணி

1941ஆம் ஆண்டு தொடக்கம் மலாயா ஜப்பானியர் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் பின்னர் தொடர்ந்த வந்த ஆண்டுகளில் ஜப்பானியர் ஆட்சி, மலாயா வாழ் இந்தியர்களுக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்லலாம். இதில் மிகவும் முக்கியமானது’ இந்திய தேசிய இராணுவம்’ அமைக்கப்பட்டது ஆகும்.

ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி நாடுகளின் ‘அச்சு நாடுகள்’ என்ற கூட்டமைப்புடன் இந்தியாவில் சுபாஷ் சந்திரபோஸ் ஏற்படுத்திய ஒப்பந்தத்தின் விளைவாக அந்தத் தேசிய இராணுவம் அமைந்தது.

(தொடரும்)











No comments: