தமிழ் மொழியின் மீது
டான்ஸ்ரீ சோமாவிற்கு எப்போதுமே ஒரு வலுவான பிடிப்புணர்வு
இருந்து வந்தது. தமிழவேள் கோ.சாரங்கபாணி தொடங்கி
வைத்த ’தமிழ் எங்கள் உயிர்’
நிதிக்கு பொதுமக்கள் மூலமாக நிதி திரட்டிக்
கொடுப்பதில் தீவிரம் காட்டினார். அடுத்து,
கூலிம் தமிழ்ப்பள்ளிக்கு நல்ல ஒரு கட்டிடம்
அமைக்க வேண்டும் என்றும் தீவிரமாகச் செயல்பட்டார். இது அவருடைய நெடுங்கால கனவாகும்.
![]() |
கெய்ரோ தமிழ்ப்பள்ளியில் |
ம.இ.கா. என்கிற
அளவில் அவர் நின்று விடவில்லை.
ம.இ.கா
சார்ந்துள்ள கூட்டணித் தோழமைக் கட்சிகளான ம.சீ.ச, அம்னோவுடனும்
இணைந்து நல்ல ஒரு நட்புறவை
வளர்த்துக் கொண்டார். அதனால், டான்ஸ்ரீ சோமா
அவர்களுக்கு கெடா மாநில அரசாங்கத்தில்
நல்ல செல்வாக்கும் கிடைத்தது.
பல்வேறு
அரசு சார்ந்த குழுக்களில் நியமனம்
செய்யபட்டார். குடியுரிமை வழங்கும் குழுவிலும் அவர் இருந்தார். ஒரு
கட்டத்தில் தமிழர்கள் பலருக்கு மலாயாவில் நிலையாக வாழ மனம்
இல்லை. தமிழகத்திற்கே திரும்பி போக நினைத்தனர்.
அப்போது
டான்ஸ்ரீ சோமா தோட்டம் தோட்டமாகச்
சென்று மலாயாவின் வளப்பத்தையும் எதிர்கால வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார். அவர்களுடைய குழப்பங்களை மட்டும் தீர்க்கவில்லை. பலர்
குடியுரிமை பெறுவதற்கும் உதவிகள் செய்தார்.
![]() |
பால்மரம் சீவும் பிரதமர் தேசியத் தந்தை துங்கு |
1960களில் இவர் கூலிம்
நகராண்மைக் கழகம், குடும்ப நிர்வாக
மன்றம் போன்றவற்றில் நிறைவான சேவைகளை வழங்கி
வந்துள்ளார். 1962 ஆம் ஆண்டு கெடா
மாநில ம.இ.கா.
இளைஞர் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்றார். 1965 ஆம் ஆண்டில் கெடா
மாநில ம.இ.காவின்
துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலில் படிப்படியான முன்னேற்றங்கள்.
அடுத்து
ம.இ.கா
மத்திய செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய அரசியல்
வாழ்க்கை தேசிய நிலையிலும் பரிணமித்தது.
அரசியல் பதவிகளை அலங்கரித்த போதும்
இவருடைய எண்ணங்கள் அனைத்தும் மக்களுக்குச் சேவை செய்வதில்தான் பல்கிப்
போய்க் கிடந்தன.
No comments:
Post a Comment